Friday, 20 April 2012

யோக சமாதி சித்தத்துள்ளே சிவனைக் காட்டும்

யோக சமாதி சித்தத்துள்ளே சிவனைக் காட்டும்

யோக சமாதியின் உள்ளே அகலிடம்
யோக சமாதியின் உள்ளே உளர்ஒளி
யோக சமாதியின் உள்ளே உளசக்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே.

விளக்கம்:
 யோக சமாதியாகிய சகமார்க்கத்தின் உள்ளே விரிந்து பரந்த இந்த உலகமெல்லாம் அடங்கும். யோக சமாதியில் இருப்பவர் உள்ளத்துள்ளே, பேரொளிக் காட்சி தோன்றும். யோக சமாதியில் இருப்பவர் உள்ளே பரம் பொருள் உருவம், பராசக்தி வடிவம் தோன்றும். இப்படிப்பட்ட மேலான யோக சமாதியை விரும்பி மேற் கொள்பவர்கள் சித்தர்களாவர்.

Thursday, 12 April 2012

அடங்கும் மனது அமுத ஊற்று

அடங்கும் மனது அமுத ஊற்று

உருஅறியும் பரிசு ஒன்றுஉண்டு வானோர்
கருவறை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.

விளக்கம்:
 உள்ளத்துள் உள்ள இறைவனை அறிந்துணரும் உயர்ந்த வழி ஒன்று இருக்கிறது. (அது தெரியாமல்). விண்ணுலகத் தேவர்கள், மந்திர மலையை நாட்டுப் பாற்கடலைக் கடைந்து வெளிப்பட்ட அமுதத்தை உண்டு அதன் மூலம் அழியா நிலை (அமரத்துவம்) பெற்றனர். அவர்கள் மனமாகிய மலை உச்சியிலே ஏறி, அதில் ஊறும் அமுதம் பருகத் தெரியாதவர்கள்.தியானம் செய்யும் சிந்தையில் பரம்பொருளை எண்ணித் தியானிப்பவர் மனம் அடங்கச் சிவசொரூபம் அங்கே தென்படும். இதுவே உரு அறியும் பரிசு.

Wednesday, 11 April 2012

தவயோகம் தரும் நலம்


தவயோகம் தரும் நலம்

தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.

விளக்கம்:
தியானத்தில் ஈடுபட்டு இருக்கிறவர்களுக்கு மெய்ப் பொருளாகிய சிவனருள் கிட்டும். சிவனருள் கிட்டுவதால் மாது நல்லாளாகிய சக்தியும் சிவத்தோடு பொருந்தி நின்று நல்லருள் புரிவாள். தவத்தையும் தியானத்தையும் அழிக்க மனதில் குடிகொண்டிருந்த கோபம் அகன்று விடும். மனம் அசையாது சிவ சிந்தையில் நேராகத் தராசு முனை போல நிற்கின்ற தவத்தைச் செய்பவர்கள், இந்த நலங்களெல்லாம் பெற, அவர்கள் மனமும் ஆடாது, அசையாது தராசு முனைபோல் நிற்கும்.

Thursday, 5 April 2012

காட்டு விலங்குக் கூட்டம் உள்ளம்

காட்டு விலங்குக் கூட்டம் உள்ளம்

திகைக்கின்ற சிந்தைஉள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகிக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டாமே.

விளக்கம்:
 என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறுகின்ற எண்ணத்தில் (காமம், வெகுளி, மயக்கம்) என்னும் மூன்று சிங்கங்கள் குடியிருக்கின்றன. இன்பத்தில் ஆசைப்பட்டு அதை அடைய விரும்பி அலையும் மனத்துள்ளே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு நரிகள் இடங்கொண்டுள்ளன. எதையும் வகைப்படுத்தி என்னும் உள்ளத்துள்ளே ஐம்புலன்களாகிய (மெய், வாய், கண், மூக்கு, காது) ஐந்து குட்டி யானைகள் உலவுகின்றன. உள்ளேயும் வெளியேயும் அலைபாயும் மனத்துக்கு உள்ளது இந்த இரண்டு குணங்களுமே.

வேண்டியன அருள்வாள்


வேண்டியன அருள்வாள்

நேர்தரும் அத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

விளக்கம்:
நினைத்ததை அருள நேர்படும் அன்னை பராசக்தி, என்ன நிறமுடையவள் என்பதை அறியவேண்டில், அந்த அன்னையின் திரு உருவம், காயாம்பூப் போன்ற கருநீல வண்ணம் கொண்டதாகும் என்பதை அறிக. நினைத்து வழிபடுபவர்க்கு வேண்டியதை அருளும் அன்னை, அவளை நினைத்து நீயும் வழிபட்டுப் பயனடைக. அவள் விரும்பும்படி நடந்து கொள்க.

Tuesday, 3 April 2012

ஆறேழுத்து அறு சமயச் சாத்திரம்

ஆறேழுத்து அறு சமயச் சாத்திரம்

ஆறெழுத் தால்அவ் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்(து) ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

விளக்கம்:
ஆறு எழுத்து, ''ஓம் நமசிவாய''. ஆறு எழுத்துக்களால் ஆனவை ஆறு சமயங்களும் என்பர். ஒவ்வொரு எழுத்தையும் நான்கால் பெருக்க இருபத்தி நான்காகும். இந்த இருபத்து நான்குமே காயத்ரீ மந்திரமாகும். காயத்ரீயின் மூல எழுத்து ஓம் என்னும் பிரணவம். இந்த 'ஓம்' என்னும் பிரணவத்தின் உண்மைப் பொருளறிய வல்லார் பிறவித் துயர் நீங்கப் பெற்றவராவார்கள்.