Thursday, 29 March 2012

வருந்தி அழைத்தால் வருவான்

வருந்தி அழைத்தால் வருவான்

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

விளக்கம்:
 வறண்ட நிலத்துக்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வாராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பர், அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள்செய்வான். எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்குப் பால் வேண்டிக் கன்று தாய்ப் பசுவை அம்மா என்று அழைக்குமே, அது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் அவனும் அப்படிப்பட்டவர்களுக்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே, '' வா.. வந்தருள் செய்!'' என்று வருந்தி அழைக்கிறேன்.

Tuesday, 27 March 2012

கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்

கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்

எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.

விளக்கம்:
 எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள் கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.

Monday, 26 March 2012

புவி ஏழும் ஆட்டும், சிவனோடு கூட

புவி ஏழும் ஆட்டும், சிவனோடு கூட!

ஒன்றுஇரண்டு ஆடஓர் ஒன்றும் உடன்ஆட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடன்ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.

விளக்கம்:
 ஒன்றாக இருக்கிற ஆகாயம், இரண்டான காற்று இரண்டும் ஒப்பற்ற பரம்பொருளுடன் ஆட, ஒரு பரம்பொருளோடு ஒன்றிய அக்கினி, சூரிய சந்திரர்கள் என்னும் மூன்றுடனே ஏழு உலகங்களும் சேர்ந்தாட, அதனால் 'ஒன்பதும் உடனாட நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும், சந்திர சூரியர்களும் ஆட, சிவம், சக்தி, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், பிரமன், திருமால், நாதம், விந்து ஆகிய ஒன்பதும் உடன் ஆடச் சிற்றம்பலத்தில் பரம் பொருள் மாணிக்கக் கூத்து ஆடினான். இயக்குபவன் இயக்க, அண்ட சராசரம் அனைத்தும் இயங்கும். இது குறித்ததே பஞ்ச பூதம் ஆட, சூரிய சந்திரர் ஆட, பிரமாதி தேவரும் ஆடினர் என்றது.

Thursday, 22 March 2012

தானே சிவன் ஆகும் தவம்


தானே சிவன் ஆகும் தவம்

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந்
தவம் ஒன்றில்லாத தத்துவமும் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால்அச்
சிவமென்பது தான்ஆம் எனுந்தெளி வுற்றதே.

விளக்கம்:
 அன்பே சிவமாகும். அன்பே சிவமாகி விட்ட பிறகு, அன்பு செய்யும் உயிரே பரம்பொருள் தன்மை பெரும் பரமாகும். அன்பே சிவமாகி விட்ட பின்னர் பசி, பட்டினி கிடந்து புரிகின்ற தவங்கள் தேவயற்றனவாகி விடும். சிவத்தோடு பொருந்தி இருக்கின்ற புண்ணியர்கள் இவர்கள் ஆகையால் அச்சிவப் பரம்பொருளே தான்தான், தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவுண்டாகும்.

Wednesday, 21 March 2012

கருத்தில் ஒன்றிக் காணுக

கருத்தில் ஒன்றிக் காணுக

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்துள் இருந்திடில்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற  நில்லே.

விளக்கம்:
ஆருயிர்களோடு கலந்து அம்மை அவற்றிற்கு அருளுவதைக் கண்கூடாகக் காணவும் இயலும். அவளை மனத்தில் இருத்தித் துதிக்கக் கண்ணெதிரே காணவும் இயலும். அவள் தோன்றக் காணலும் ஆகும். உயிர்களோடு கலந்து இருக்கிற அவள் அவ்வுயிர்களை வழிநடத்திச் செல்வதையும் காணலாம். எனவே அவள் நினைவு நீங்காத வகையில், அவளைக் கருத்தில் இருத்திக் கண்டு கொண்டே இருப்பாயாக.

 

Tuesday, 20 March 2012

வாச மலர் தூவி வழிபடுக

பூசனை செய்யப் பொருந்தியோர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:
வயிரவ பூசை செய்வோர், உள்ளம் ஒன்றி, ஓராயிரம் போற்றிகள் கூறி, மணமலர் தூவி வழிபடுக. தேன் அபிஷேகம் செய்து, தேனைப் படைத்துப் பூசியுங்கள். சந்தனம், சவ்வாது, புனுகு ஆகிய வாசனைப் பொருள்களை மேலே சாத்துபடி செய்து, வழிபாடு செய்வாயாக. மது - தேன். ஆடுதல் - நீராட்டுதல் போல அபிஷேகம் செய்தல். புழுகுநெய் - புனுகுச் சட்டம். பூசலை - சாத்துப்படி செய்தல், மேல் அணிவித்தல்.

 

Thursday, 15 March 2012

கனவில் நனவு காணும் துரியம்

கனவில் நனவு காணும் துரியம்

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில்உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நனவு ஆமே.

விளக்கம்
:
ஆருயிர்கள் தன்னை மறந்த அதீத நிலையில் இருப்பதற்கும், அவை கருவில் உருவாகிப் பிறப்பதற்கும், பிறந்த உயிர் உறக்க நிலையில் மயங்கி, புலன் இச்சை வழிச் சென்று விரும்பியதை அடைந்தின்புறும் ஆசை அடைவதற்கும் காரணம், பரம்பொருள் கூட்டுவிக்கும் மாயையேயாம். சுழுமுனையும் அதைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத சூக்கும நிலை எட்டும் பொருந்த நுண்ணுடல் கனவும், பரு உடல் நனவு நிலையும் அடையும்.
அதீதம் - எல்லாம் கடந்தநிலை, துரியம் - உறக்கம், சுழுமுனை - நடுநாடி, சூக்குமம் - நுண்ணுடல், தூலம் - பருமை.

Monday, 12 March 2012

தேட்டை இல்லாத தெய்வ நிலை

தேட்டை இல்லாத தெய்வ நிலை

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன் அவனாமே.

விளக்கம்:

 இரண்டும் கண்களின் பார்வையையும் நடு மூக்கில் வைத்திடில், புருவ மத்தியில் பொருந்தச் செய்தால்; உடலுக்குத் தளர்வும் இல்லை, உடம்புக்கும் அழிவில்லை, ஒரு நிலையில் நிற்காது மனம் தறிகெட்டு ஓடுவதும் இல்லை. உணர்ந்தறியும் நிலையும் இருக்காது. 'தான்' என்ற ஆணவம் இல்லாது போகும். விருப்பமும் இச்சையும் தேடுதலும் இருக்காது. இந்த நிலையில் சீவனே சிவனாகும். நாட்டம் - பார்வை, மூக்கு நுனி - புருவமத்தி. வாட்டம் - வாடுதல். மனை - வீடு. இங்கே உடம்பு. தேட்டம் - விருப்பம்.

Thursday, 8 March 2012

Meditation


தியானம்

வரும்ஆதி ஈரேட்டுடன் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

விளக்கம் :
தியானம் என்பது உணர்வும், நினைவும் ஒன்றி இருக்கிற நிலை. வரும் ஆதி ஈரேட்டுடன் வந்த - ஈரெட்டு பதினாறாவது: ஐம்புலன்கள், ஐந்து பூதங்கள், அந்தக் கரணம் நான்கு, மாயை ஒன்று, உயிர் ஒன்று என்ற பதினாறில் படிந்துத் தியானம், பொருவாத புந்தி புலன் போக மேவல் - மெய்யாகிய புத்தி புலங்களில் வைத்த பற்றுதல் நீக்கி இருப்பதாகும். இதில் உருவாய - உருவோடு கூடிய சக்தியைத் தியானித்தல் பரத் தியானம் ஆகும். உன்னும் - நினைக்கும். ஞான நல்லாசிரியனாம் சிவனை எண்ணித் தியானித்தல் சிவத்தியானம் ஆகும். இவை தவயோகத்தின் இரு வகைகளாகும். கூறு - வகை. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறிகள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐம்பூதங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - நான்கு அந்தக் கரணங்கள்.

Wednesday, 7 March 2012

அட்டமா சித்தி

அட்டமா சித்தி

பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்த வாறே.

விளக்கம்:

திக்கெட்டிலும் (எண் திசையும்) தெய்வப் பரம்பொருளைத் தேடி வணங்கிப் பணிந்து, எட்டுத் திக்குகளிலும் இவனே மேலான தெய்வம் எனத் தெரிந்து (துணிந்து), சிவப் பரம்பொருளை வணங்கி, அந்த எட்டுத் திசைகளிலும் எட்டு வகைச் சித்திகளும் அடையப் பெற்று,திக்கெட்டிலும் திகழ எட்டுச் சித்திகளும் எய்தல் இயலுவதாகும். எட்டுச் சித்திகளாவன: சுருங்குதல், விரிதல், பெருத்துக்கனமாதல், இலேசாதல், வேண்டியதைப் பெறுதல், விரும்பியதை மேற்கொள்ளல், வசியமாக்குதல், வேற்றுருக்கொள்ளுதல் என்ற எண் வகைச்சாதனைகள். அணிந்து - அடையப் பெற்று. தணிந்து - நின்று. தாபித்தல் - நிலைபெறச் செய்தல்.