Saturday, 27 April 2013

பக்குவம் எய்தும் பரமானந்தம்



பக்குவம் எய்தும் பரமானந்தம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.


விளக்கம்:
 பிறவிப் பேறு எய்தி, மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, அந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும்போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி எறியும் பக்குவ நிலை எய்தியபோது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பேரின்பம் கண்டேன்.

Wednesday, 27 February 2013

சிந்தை அடங்கில்

சிந்தை அடங்கில்...



கத்தவும் வேண்டாம் கருத்துஅறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல்அற்று இருக்கிலே.


விளக்கம்:
 அறநூல்கள் கூறும் மெய்ப்பொருளின் உண்மை உணர்ந்து அறிவும் மனமும் அடங்கப் பெற்றால் வீண் ஆராவாரம் தேவையில்லை. அதே போல, மனம் அடங்கி நிட்டையில் இருக்கின்ற யோகம் கைவரப் பெற்று விட்டால், உரக்க ஒலியெழுப்பி உபதேசம் செய்யவோ ஆடம்பரமாகப் பேசி ஆர்ப்பாட்டம் செய்யவோ வேண்டாம். ஆசையும் பாசமும் அகன்று, பற்றற்று நின்றால், புறத் தூய்மை வேண்டும் என்ற அவசியம் இல்லை (அகத் தூய்மை பெற்று விட்டதால்). மனம் செயல் அற்றுச் சிந்தனை ஒருமுகப்பட்டு விட்டால், மனமும் வேண்டாம். மனமும் வேண்டாம் என்பது மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் தவயோகம் கைகூடிவிட்ட பின் சித்தம் செயலற்று விடும்.

Saturday, 23 February 2013

தனித்திரு துதித்திரு

தனித்திரு துதித்திரு 


தானே புலன்ஐந்தும்  தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்தும்  தன்னில் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்ததே.

விளக்கம்:

 தாமாகவே மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நமக்கு அடங்கும். நம் சொற்படி இயங்கும். இந்த ஐம்புலன்களும், தாம் விரும்பியபடி, நம்மை இயக்கும் தன்மையை இழக்கும். ஐம்புலன்களும் இதுவரை அவை விரும்பும் வண்ணம் நம்மை ஆட்டுவித்த நிலைமை மாறும். இவை எல்லாம் யாருக்குக் கைகூடும் என்றால், ஐம்புலன் இச்சையில் இருந்து விடுபட்டுத் தனியே சென்று (ஆசாபாசம் அகற்றிப் ) பரம்பொருளை அடைந்து அவன் திருவடி பற்றியவர்களுக்கு, இவையெல்லாம் சித்திக்கும்.

Thursday, 6 December 2012

குரு அருளே திருவருள் 



தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:
 குருநாதரின் அழகிய திரு உருவைக் கண்டு வணங்குதல் அறிவுக்கு விளக்கமாகும். குருவின் திருப்பெயரைத் தியானித்தல் கூட அறிவு மேம்பட உதவும்.குருவின் அருளுரைகளைக் கேட்பது அறிவை விசாலமடையச் செய்யும். இவை எல்லாவற்றையும் விட, அந்த ஞானாசிரியரின் திருஉருவை நெஞ்சில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே, நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கம் - அறிவுக்கு விளக்கம் ஆகும். தெளிவு என்பதற்கு அறிதல், விளக்கமுறல் எனப் பல பொருள்கள் உண்டு. திருவருளைப் பெறவும் குருஅருளே துணை செய்யக் கூடுமாதலால், குரு அருளின் பெருமை கூறப்பட்டது.

Wednesday, 5 December 2012

அறம் பல செய்யவே அமைந்தது வாழ்வு 


ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே .


விளக்கம்:

 காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகின்றன. இப்படிப் பல யுகங்கள் போய்விட்டன.கட்டிய மனக்கோட்டைகள் ஆசைக் கனவுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குறைந்து குன்றி விட்டன.சாறு பிழிந்த சக்கை போலத் தங்கள் பெருந்துன்பத்துக்கு இடமான உடல் மெலிந்து தளர்ந்து ஒருநாள் அழிந்தும் போகும். இதை எல்லாம் பார்த்த பிறகும் மக்கள் அறத்தின் பயன் அறியாது இருக்கிறார்களே! உயிர் உள்ளபோதே நல்லறச் செயல்களை மேற்கொள்ள இவர்கள் ஏன் நினைப்பதில்லை? நினைக்க வேண்டும்.


Wednesday, 23 May 2012

சித்தம்பர நடனம்

சித்தம்பர நடனம்

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.

விளக்கம்:
 அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர் ஆவார்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன் இச்சையை விட்டொழித்தவர்கள் இவர்கள். ஆகையால் இவர்கள் தூய்மையானவர், புனிதமானவர் எனலாம். இப்படிப் பட்டவர்கள் மனம் பரவெளியில் பரம்பொருளோடு கலந்து ஆனந்த நடனமிட மகிழ்ந்திருப்பர்.

Wednesday, 16 May 2012

மூவரும் ஒருவரே

மூவரும் ஒருவரே
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

விளக்கம்:
 உலகத் தோற்றத்திற்கு மூல முதல் காரணமான உருத்திரனும், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்கும், நீலமணி வண்ணமுடைத் திருமாலும், உயிர்களைப் படைப்பவனாகிய தாமரை மலர் மேல் இருக்கின்றவனான பிரமனும், ஆகிய மூவரையும் எண்ணிப் பார்த்தால் இம்மூவரும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களால் வேறானாலும், மூவரும் ஒரு மூலப் பரம்பொருளான சிவமே என்பதை உணராமல், இவர்கள் மூவரும் வேறு வேறு என்று வித்தியாசப்படுத்தி, உலகத்தவர் மோதி முரணுகிரார்களே!